Friday, May 20, 2011

யார் இந்த ரஜினிகாந்த்! ஏன் இந்த கேடு!!:செய்திதாள்களில், இணையதளங்களில், தொலைகாட்சிகளில் எங்கு திரும்பினாலும் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை அவர் நலம் அடைய பிராத்தனை, அவர் நலமாக இருக்கிறார் யாரும் கவலைபட வேண்டாம் இப்படி போகிறது செய்திகள். யார் இந்த ரஜினிகாந்த்? இவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உங்களுக்கு என்ன? ரஜினியின் மனைவி, குடும்பத்தார் படவேண்டிய கவலையை ஏன்? மொத்த தமிழகமும் பட வேண்டும். அவர் ஒரு சிறந்த நடிக்கிறார், அவர் தன் நடிப்பிற்க்காக கோடிகணக்கில் பணம் வாங்குகிறார். நீங்கள் பணம் கொடுத்து அவர் படத்தை பார்கிறீர்கள். இதுதானே அவருக்கும் உங்களுக்கு உள்ள உறவு. இதை தவிர வேறேதும் இருக்கிறதா? எனக்கு புரியவில்லை உங்களுக்கு புரிந்தால் எனக்கு விளக்கலாம்.

அப்படி என்ன? இவர் பெரும் சமூக போராளியா? ஒரு சமூகத்தின் விடுதலைக்காக பாடுபட்டவரா? நெல்சன் மாண்டலா போல் (கறுப்பின மக்களின் விடுதலைக்காக பாடுபட்டவர்) தன் வாழ்நாளின் பெரும் பகுதியை சிறையில் கழித்தவரா? செகுவார, பெடல் காஸ்ட்ரா போல் தங்கள் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவரா? பகத் சிங்கா அல்லது நேதாஜியா!! யார் இவர்? ஏன் இந்த ஆர்ப்பாட்டம்!! அவரும் ஒரு சாதாரண இந்திய குடிமகன். ஏன்? இவர் உடல் நலம் சரியில்லை என்பதை மொத்த இந்தியாவுக்கும் காய்ச்சல் வந்ததுபோல் கூப்பாடு போடுகிறீர்கள்.

ஈழத்தில் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது, குஜராத்தில் மோடியால் ஒரு இன அழிப்பு நடந்த போது, தமிழக மீனவர்கள் கொன்று குவிக்கப்படும் போது இல்லாத ஒரு ஆர்ப்பாட்டத்தை, பரபரப்பை, சோகத்தை, ஏன் உண்டாக்குகிறீர்கள். இவரை பற்றி எழுதுகிற, கவலைப்படுகிற, இவருக்காக பிராத்தனை செய்கிற ரசிகர்களையும், அப்பாவி பொதுமக்களையும், வியாபாரம் செய்யும் ஊடகங்களையும், மற்ற அத்தனை நல்ல உள்ளங்களை பார்த்து ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன். உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா?

உங்களின் குடும்பங்களில், உறவினர்களில், நண்பர்களில் எத்தனை, எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். உங்கள் அண்டை வீட்டார், உங்கள் தெருவாசி, உங்கள் ஊரை சேர்ந்தவர் எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள்.

உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்! இவர்களை போயி பார்த்தவர்கள் எத்தனை பேர்? இவர்களுக்காக பிராத்தனை செய்தவர்கள் எத்தனை பேர்? நலம் விசாரித்தவர்கள், உதவி செய்தவர்கள் எத்தனை பேர்? முதலில் அதை செய்யுங்கள். முதியவர்கள், அனாதைகள் இப்படி எவ்வளவு பேர் இந்த சமூகத்தில் இருகிறார்கள்.

அவர்கள் நலம் அடையவேண்டும், அவர்கள் நலம் பெற நம்மால் முடிந்த உதவிகளை செய்யவேண்டும், அவர்கள் குறித்த அவலங்களை, மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுங்கள்.

எழுதுங்கள் அதைவிட்டு விட்டு ரனினிக்கு உடல்நிலை சரியில்லை, அவர் குணமாகி வந்துவிடுவார் யாரும் கவலை படத்தேவையில்லை, அவரை நான் பார்த்தேன் பேசினேன், இப்படி அறிக்கைகள் பறக்கின்றது ஒரு புறம், மறுபுறம் கோவில் தோறும் சிறப்பு பூஜைகள் இப்படி போகிறது.

ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவரை அப்போலோ மருத்துவ மனையிலோ, அமெரிக்காவிலோ கொண்டு போயி பார்ப்பார்கள். அவரிடம் வருமானத்த்திற்கு அதிகமான அளவில் பணமும், சொத்துக்களும் குவிந்து கிடக்கின்றன. உங்கள் தெருவில் உள்ள குப்பனுக்கும், சுப்பனுக்கும் உடல் நிலை சரியில்லை என்றால் அவர்களை பார்க்க முறையான வசதியோடு கூடிய ஒரு அரசு மருத்துவமனை கூட ஒழுங்கா இல்லை.

இதை பற்றி எழுதுங்கள் கவலை படுங்கள். எங்கு பார்த்தாலும் ரஜினி, ரஜினி, என்று ஒரு வேற்று மாயையை தோற்று விக்காதீர்கள். உங்கள் மனோநிலை என்று மாறும். நீங்களாக உங்களை மாற்றிக் கொள்ளாதவரை மாறுதல்கள் ஒன்றும் தானாக வராது. இந்த ஊடகங்களுக்கு எழுதவும், பேசவும் மக்கள் பிரச்சனைகளே இல்லாத ஒரு நாட்டில் வாழ்வது போல் நடந்து கொள்வது மிகவும் வேதனையான விஷயம்.

from: சிந்திக்கவும் by PUTHIYATHENRAL
5 comments:

 1. சரியான சம்பட்டி அடி.....

  ReplyDelete
 2. you are correct. each and everyone should think of their situations.

  ReplyDelete
 3. அப்படி என்ன? இவர் பெரும் சமூக போராளியா? ஒரு சமூகத்தின் விடுதலைக்காக பாடுபட்டவரா? நெல்சன் மாண்டலா போல் (கறுப்பின மக்களின் விடுதலைக்காக பாடுபட்டவர்) தன் வாழ்நாளின் பெரும் பகுதியை சிறையில் கழித்தவரா? செகுவார, பெடல் காஸ்ட்ரா போல் தங்கள் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவரா? பகத் சிங்கா அல்லது நேதாஜியா!! யார் இவர்? ஏன் இந்த ஆர்ப்பாட்டம்!! அவரும் ஒரு சாதாரண இந்திய குடிமகன். ஏன்? இவர் உடல் நலம் சரியில்லை என்பதை மொத்த இந்தியாவுக்கும் காய்ச்சல் வந்ததுபோல் கூப்பாடு போடுகிறீர்கள்.

  ReplyDelete
 4. எனக்கு ரஜினி பிடிக்கும்....!


  எனக்கு ரஜினி பிடிக்கும். எனக்கு ரஜினி பிடிக்கும். எனக்கு ரஜினி பிடிக்கும். எனக்கு மட்டுமல்ல என்னைப் போல கோடாணு கோடி பேருக்குப் பிடிக்கும். ஏன் பிடிக்கும் என்று கேட்கும் நாக்குகளுக்கு வார்த்தைகளை கொடுத்த மூளைகள் எல்லாம் மனிதர்கள் ஜனித்த பிண்டங்களுக்கு உரியதா? இல்லை இரும்பில் வார்த்தெடுத்து இயக்கங்கள் கொடுக்கப்பட்டதா?

  ஒரு மனிதனைப் பிடிக்க ஓராயிரம் காரணம் தேவையில்லை. இது மனம் சம்பந்தப்பட்ட விசயம். அறிவுகளின் செழுமையில் சில வக்கிர குரல்கள் தன்னின் சப்தங்களை உயர்த்தி ரஜினியை ஏன் இப்படி சீராட்டுகிறார்கள்? தமிழகம் ஏன் தடம் புரண்டு கொண்டு இருக்கிறது? அவர் ஒரு சுயநலவாதி, எந்த போராட்டத்தில் ஈடு பட்டார்? அவரின் தாடி ஏன் நரைத்திருக்கிறது, தலையில் முடியற்று விக் வைத்து நடிக்கிறார் என்றெல்லாம் சொல்லி தம்மின் கேவலமான மனோநிலைகளை வெளிப்படுத்தி தாமெல்லாம் பைத்தியக்காரர்கள் என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

  அடக் கேவலங்களே! எமக்கு ரஜினையைப் பிடிப்பதில் உமக்கு என்ன சிரமம்? முவ்வேளையும் நீவீர் உண்ணும் சோற்றுப் பருக்கைகளை வயிற்றுக்குச் செல்ல விடாமலா நாங்கள் தடுத்தோம். ஒரு மனிதன் இன்னொரு மனிதனை நேசிக்க வேண்டுமெனில் நீசர்களின் வரலாற்றில் அந்த மனிதர் எங்காவது தெருவில் அமர்ந்து போராடியிருக்க வேண்டும். இல்லையே அரசியல் செய்து மீடியாக்களின் முன் தன்னைப் பற்றி மற்றவர்களை பேச வைத்திருக்க வேண்டும். இல்லையேல் பெரும் தலைவராய் இருக்க வேண்டும்.

  இப்படி எல்லாம் இல்லாமல் சக மனிதனை ஒரு நடிகனை நேசித்து விடவே கூடாது. திரையில் யாம் பார்த்த ஒரு நடிகனுக்கு உடல்நிலை சரியில்லை என்பதை கண்டு நாங்கள் கலங்கினால் உமக்கு ஏளனம்??? கிண்டல், கேலி.......

  வெட்கங்கெட்ட தேசத்தில் வெறிநாய்களை எல்லாம் தலைவர்களாக்கி ஆட்சி போகத்தில் அமர அனுமதி கொடுத்து விடுவீர்கள். அண்டை தேசத்தில் தமிழனின் உயிரை எல்லாம் சூறையாட துணை போன தேசிய கட்சிகளுக்கு எல்லாம் வெட்கங்கள் அற்று போய் ஓட்டுப் போட்டு வாழ்க ஒழிக என்று கத்துவீர்கள்? ஆனால் தான் ரசித்த தான் நேசித்த ஒரு நடிகன் உடல் நலம் குன்றிப் போய் நா தழு தழுத்து பேசும் வேளையிலும் கூட நான் காசு வாங்கிக் கொண்டுதான் நடிக்கிறேன் என்னை ஏன் இவ்வளவு சீராட்டுகிறீர்கள் என்று தன் மனசாட்சிப் படி பேசினால் அவரை ஏசுவீர்கள்?

  தமிழத்தை காக்க வந்த தேவ தூதுவர்களுக்கு உங்களின் மூளைகளை கசக்கிக் கொண்டு உலக தத்துவ நூல்களை எல்லாம் வாசித்து விவாதி விட்டு நீங்கள் கொடி பிடியுங்கள், கோஷமிடுங்கள், உண்ணாவிரதம் இருங்கள் யாரும் தடை சொல்லவில்லை ஆனால் எம்மைப் போன்ற மனிதாபிமானமுள்ள மனிதர்களை தான் நேசித்த மனிதரின் நலனுக்காக இரண்டு சொட்டு கண்ணீர் விட விடுங்கள்.

  உங்களின் டப்பாங்குத்து ஆட்டத்தை எல்லாம் எமது சோகமான நேரத்தில் போடக்கூடாது என்ற அடிப்படை மனித நேயம் அற்றுப் போன மரப்பாச்சி பொம்மைகளே...! உமது வீட்டிலும் ஒரு சோகம் வரும் அப்பொது யாரேனும் மத்தளம் வாசித்து ஆடுவார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

  ஒரு மனிதன் இன்னொரு மனிதனை நேசிக்க அறிவும் ஆராய்ச்சியும் தேவையில்லை ஜடங்களே...! தான் நேசிக்கும் அந்த மனிதன் அடுத்தவருக்கு தொந்தரவு அற்றவராக தமக்குப் பிடித்தவராக இருந்தால் மட்டும் போதும்....! ரஜினி வயாதாகியும் நடித்துக் கொண்டிருப்பதால் உமது மாத சம்பளத்தில் ஏதேனும் பிடித்துக் கொள்கிறார்களா? இல்லை நீவீர் சோற்றை அள்ளி வாயில் வைக்கும் போது வலக்கை வாய்க்குச் செல்லாமல் காதுக்கு செல்கிறதா? எது உமது பிரச்சினை?

  உமது பிரச்சினையெல்லாம் ஆழ்மனதில் உமக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மை என்று கருதிக் கொள்ளலாம் என்று பார்த்தால் இது அதையும் மீறி உம்மை பிரபலப்படுத்த நீவீர் செய்யும் தெருக்கூத்து என்பதும் தெளிவாய் புரிகிறது.

  ஒரு மனிதனுக்கு முடியாவிட்டால், உடல்நலன் குன்றியிருந்தால் பதறக் கூட வேண்டாம் ஆனால் ஒரு வருத்தம் கூட இல்லாமல் அந்த மனிதனை விமர்சிப்பது எல்லாம் மானிடப் பதர்கள் எனக் கொள்ளலாமா? எங்கே இருந்து முளைக்கிறது உமக்கு கேவல கொம்புகள்? காலம் எல்லாவற்றையும் செதுக்கிப் போட்டு விடும்.. என்ற சிற்றறிவு கூட அற்றுப் போய் ரஜினியைப் பற்றி தாறுமாறாய் விமர்சிக்கும் ஒரு போக்கிற்கும், மனிதர்களுக்கும் இந்த கட்டுரை கடும் கண்டனங்களை ஆழமாகப் பதிந்து....

  ரஜினி என்னும் ஒரு மனித நேயம் கொண்ட மனிதன் எல்லா உடல் நலக் குறைவுகளிலும் இருந்து விடுபட்டு வெளிவந்து தன் குடும்பத்தாரோடும், தன்னை நேசிக்கும் ரசிக்கும் மனிதர்களுக்கு நடுவே நீ டூடி வாழ்க என்று ஏக இறையிடம் எமது பிரார்த்தனைகளையும் மானசீகமாக சமர்ப்பிக்கிறது.

  ReplyDelete