Thursday, March 24, 2011

ரஜினியை தொடர்ந்து மாஸ் ஹீரோக்கள் காணாமல் போவார்கள்தலைப்பை பார்த்து தாம்தூம் என்று குதிப்பவர்கள் முழுவதும் படிக்கும் படி கேட்டுகொள்கிறேன். 
சினிமாவில் மாஸ் ஹீரோக்கள் ரசிகர்களை சம்பாதிக்கவும், இலாபத்தை பெற்றுக்கொடுக்கவுமே சரி. காலங்கடந்து போற்றபடுவார்களா? என்பது சந்தேகமே. மாஸ் ஹீரோக்கள் தமது ரசிகர்களே திருப்தி படுதுவதற்கும் குறிப்பாக அந்த தலைமுறை ரசிகர்களுக்கு ஏற்ற வகையில்தான் நடிப்பார்கள் இதனால் தொடர்ந்து வரும் தலைமுறைகளை இது கவருமா?? தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ வரிசையில் எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய், அஜித் என அடையாளம் காணப்படுகிறார்கள். 

1975 ல் அபூர்வ ராகங்களில் கதவை திறந்து கொண்டு தமிழ் சினிமாவுக்கு வந்தவர் ரஜினி, அதன் பிறகு அவரின் கேரியரில் இதுவரை அவரின் இடத்திற்கு யாரும் போட்டியும் போடவில்லை, அவர் இடத்தை வேறு யாருக்கும் விட்டு தரும் நிலையும் வரவில்லை. தமிழ் சினிமாவை பொருத்தவரை ரஜினி ஒரு மறக்க முடியாத சக்தி, இவரின் ஸ்டைல் மட்டுமே இவரின் ரசிகர்களை கட்டி போட்டு வைத்திருக்கிறது என்றால் இது மிகையல்ல. இது வரை 154 படங்களை நடித்து முடித்திருக்கிறார் ரஜினி, இதில் கன்னடா, தெலுங்கு, பெங்காலி, ஹிந்தி போன்ற மொழிப்படங்களும் அடக்கம்.


16 வயதினிலே படத்தில் ரஜினியின் அட்டகாசமான நடிப்புடன் கூடிய ஸ்டைல் அனைவரையும் கவர்ந்தது. அதுவே அவருக்கு பெரிய திருப்பு முனையாகவும் அமைந்தது. அதற்கு பின்பு அவரின் இத்தனை படங்களில் அவரின் நடிப்புக்கு தீனி போடும் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இது வரை அவரை நல்ல நடிகராக மக்களுக்கு காட்டிய படங்கள் இரு கைவிரல்களுக்குள் அடக்கம். என்னதான் தன்னுடைய ஸ்டைல் மக்களிடையே பிரபலம் என்றாலும் நடிப்புக்கு தீனி போடும் நல்ல படங்களைத் தேடி நடிக்காதது ஒரு நடிகனாக ரஜினியின் தோல்வியே.

இதற்கு முன்பு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் தியாகராஜபாகவதர். அவர் பல திறமைகளில் கொடிகட்டிப்பறந்தவர். ஆனாலும் தமிழ் சினிமாவின் வரலாற்று அழிவில் சிவாஜி, எம்ஜிஆர் காலத்தில்தான் தமிழ் சினிமாவின் காலங்களே தொடங்குவதாக எண்ணிக்கொள்ளத் தோன்றுகிறது; அப்படி பார்த்தோமானால் சினிமாவை சரியாக தன் சொந்த வாழ்க்கைக்கு பயன் படுத்திக்கொண்டவர் எம் ஜி ஆர். ஆனால் தமிழ் சினிமாவின் ரசிகர்களால் சிறந்த நடிகராக பார்க்கப்பட்டவர் சிவாஜி என்பதை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.


சிவாஜி மற்றும் எம் ஜிஆர் இருவரும் சம அளவு ரசிகர்களை கொண்டிருந்தாலும் காலம் கடந்தவர்கள் சினிமாவை பார்க்கும் போது மாஸ் ஹீரோக்களோ தயாரிப்பாளர்களை வாழவைத்தவர்களோ மட்டுமே சிறந்த நடிகராக இருக்க முடியாது. சிறந்த நடிகர் என்றால் இன்னமும் எம் ஜி ஆரை பின்னுக்குத்தள்ளி சிவாஜி வந்து நிற்கிறார். காலப்போக்கில் தமிழக முதல்வராக மட்டுமே எம்ஜி ஆர் பாக்கப்படுவார் சிறந்த நடிகராக சிவாஜியே இருப்பார் என்பது ஆணித் தரமான உண்மை.எம்.ஜி.ஆர் படங்களை இனிவரும் தலைமுறை இன்னும் பத்து வருடங்களில் மறந்துகூடப்போகலாம். 

இந்த விசயத்தை பார்க்கும் போது ரஜினி, விஜய், அஜித் போன்றோர் எம்.ஜி. ஆர் வரிசையில் வருகிறார்கள். ரஜினியால் வாழ்ந்த தயாரிப்பாளர்கள் நிறைய, இவரின் ஸ்டைலுக்கு ரசிகர்கள் எக்கசக்கம், ஆயினும் இவரால் எம்.ஜி ஆரைப்போல் தனக்கு கிடைத்த வரவேற்ப்பை காலம் கடந்து வைத்துக்கொள்ளும் நிலைக்கு மாற்றிக்கொள்ள முடியவில்லை. அதற்கான வாய்ப்பு 1996 ல் வந்தாலும் அதை சரியான முறையில் கையாளாமல் விட்டு அது கை நழுவிப்போனதும் அனைவரும் அறிந்ததே.

1990 க்கு பிறகு கடைசி 20 வருடங்களில் அவர் நடித்த படங்கள் தளபதி, மன்னன், அண்ணாமலை, பாண்டியன், உழைப்பாளி, வீரா, பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா, பாபா, சந்திரமுகி, சிவாஜி, குசேலன், எந்திரன். இதில் குசேலன், பாபா, பாண்டியன் தவிர அனைத்து படங்களுமே வெற்றிப்படங்கள். ஆனால் இதில் ரஜினியில் நடிப்பு பேசப்பட்டது தளபதி, பாட்ஷாவில் மட்டுமே. ரஜினியின் ரசிகர்கள் மற்றப்படங்களையும் கண்டீப்பாக மெச்சுவார்கள்.

ஆனால் காலங்கடந்த ரசிகர்கள் இந்த படங்களை பார்க்கும் போது மிக மட்டமான படமாகத்தான் தெரிகிறது. இதற்கு காரணம் இவர் எப்போதும் போன தலைமுறை மக்களுக்காகவே படம் எடுக்கிறார். அடுத்த தலைமுறை மக்களை அவர் கண்டுகொள்வதே இல்லை. இன்று வரை இவரின் சிறந்த படமாக பார்க்கப்படுவது 16 வயதினிலே, முள்ளும் மலரும், எங்கேயோ கேட்ட குரல், மூன்று முகம். இதில் எல்லாம் இவரின் நடிப்பு தனி முத்திரை பதிக்கும் வகையில் அமைந்திருக்கும். இப்படி ஒரு ரஜினியை இப்போதெல்லாம் தேடினாலும் கிடைக்க வில்லை…


இவரின் சகநடிகரான கமலஹாசன் தயாரிப்பாளர்களால் பெரிதும் விரும்ப படாதவராக கூட இருக்கலாம், ஆனாலும் இவரின் மைல்கல்கள் இவரை எதிர்கால சினிமா விரும்பிகளை வசியப்படுத்தி வைத்திருக்கிறது. கமலின் படங்கள் எப்போதும் ரசிகனை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதாகவே அமைகிறது, அவர் செய்யும் நகைச்சுவைப்படங்கள் உட்பட.

குணா படம் வந்த போது பார்க்காதவர்கள் ஏன் அப்போது பிறக்காதவர்கள் கூட இன்று அந்த படத்தை மெய் சிலிர்க்க பார்க்கிறார்கள். அந்த படம் அப்போது மக்களிடையே தோல்வி படமாகவே அமைந்தது. அப்போதைய ரசிகர்களின் மனநிலை, அதே போல் அன்பே சிவமும், விருமாண்டியும் கூட சொல்லலாம். அதற்காக கமல் கமர்ஷியல் படங்கள் தரவே இல்லையா என்று கேட்கலாம்… ஆனால் நான் நடித்த கமர்ஷியல் படங்களை நானே பார்க்க விரும்ப வில்லை என்பதை அவரே சொல்லி அவருக்கான தனிப்பாதையும் அமைத்திருக்கிறார்.

ரஜினி என்ற ஸ்டைல் புயல் நீண்ட நாட்கள் தமிழ் சினிமா மனதில் நிற்காது. அதன் காரணம் ரஜினியும் கமர்ஷியல் என்ற புயலில் அடித்துச்செல்லப்பட்டு விட்டார், ஹிந்தியில் கடைசி காலங்களில்ஆமிதாப் வயதுக்கான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தன்னை ஒரு நல்ல நடிகனாக காட்டிக்கொண்டுள்ளார். ஆனால் யக்குபாய் படத்தில் ரஜினி வயதான பாத்திரத்தில் நடிக்காதது ஏன்?

அமிதாப்பின் அடுத்த தலைமுறையான அமீர்கான், ராஜா ஹிந்துஸ்தானி வரை டூயட் பாடிக்கொண்டிருந்தவர், அதன் பின்பு தனக்கான களம் அது அல்ல என்று புரிந்து பெப்லீ லைவ் வரை வந்துள்ளார், இது போன்ற படங்களை எல்லாம் ரஜினி யோசித்து கூட பார்த்திருக்க மாட்டார் என்பது நிச்சயம். இத்தனை வயதுக்கு பின்பும் ரஜினி எந்திரன் போன்ற கமர்ஷியல் சினிமாவில் நடிக்க வேண்டிய அவசியம் என்ன?? வசூல் ரீதியாக எந்திரன் பேசப்படலாம், டெக்னிகலாக பேசப்படலாம், ரஜினியில் நடிப்பு?? கேள்விக்குறியே??


ரஜினியை போலவே இன்றைய காலத்தில் அதிகளவான ரசிகர்பட்டாளத்தை கொண்டுள்ள விஜய், அஜித் போன்றவர்களின் நிலையும் அவ்வாறே?? கடந்தகாலங்களில் ரஜினி வசூலுக்கு இணையாக பேசப்பட்ட விஜயின் மாஸ்ஹீரோசிய படங்கள் அவரது ரசிகர்களை திருப்தி செய்தலும் ஏனைய ரசிகர்களை திருப்தி செயவில்லை. அதற்க்கு மாறாக வந்த காவலன் ஹிட்... இதானல்தான் என்னமோ இனிவரும் அவரது படங்கள் நண்பன், பொன்னியின் செல்வன் என மாறுபட்டதாகவே உள்ளது?

இப்படி மாஸ், ஹீரோசிய படங்களில் தொடர்ந்து நடிக்கும் ரஜினி போன்றநடிகர்கள் இனி காணாமல் போவது உறுதி...!
பதிவின் சில பாயிண்ட்க்கு நறுமுகை வலைத்தளத்திற்க்கு நன்றிகள்

Tuesday, March 22, 2011

கவுண்டமணியின் சில மணியோசைகள்கவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ் சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. கவுண்டமணியின் சில மணியோசைகள் மட்டும் இங்கே…

* ‘சுப்பிரமணி’யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக்கொண்டபுரம்!
* கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் ரஜனீஷின் மேற்கோள்கள் தெறிக்கும். ‘பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி’ என்பார் இயக்குநர் மணிவண்ணன்!
* பாரதிராஜாதான் ‘கவுண்டமணி’ எனப் பெயர் மாற்றினார். ‘16 வயதினிலே’தான் அறிமுகப் படம்!
* அம்மாவை ‘ஆத்தா’ என்றுதான் ஆசையாக அழைப்பார். வீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டுவிட்டுத்தான் நகர்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின்போதுதான் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது. அவ்வளவு தூரம் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பார்!


* கவுண்டமணியை நண்பர்கள் செல்லமாக அழைப்பது ‘மிஸ்டர் பெல்’ என்று. கவுண்டமணியே நண்பர்களைப் பட்டப் பெயர் வைத்துத்தான் கூப்பிடுவார். அவை யாரையும் புண்படுத்தாது. நகைச்சுவையாக மட்டுமே இருக்கும். ஆரம்ப கால நண்பர் மதுரை செல்வம் முதல் அனைவரிடமும் இன்று வரை நட்பினைத் தொடர்ந்து வருகிறார்!
* மிகப் பிரபலமான கவுண்டமணி – செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். இது ஓர் உலக சாதனை!
* இவர் மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக மட்டும் நடித்த படங்கள் 12.
* கவுண்டமணிக்குப் பிடித்த நிறம் கறுப்பு. எந்நேரமும் அந்த நிறம் சூழ இருந்தால்கூட ‘சரி’ என்பார். ‘இங்கிலீஷ் கலருடா ப்ளாக்!’ என்பவர், எங்கே போவதென்றாலும் ஜீன்ஸ்-கறுப்பு நிற பனியன் அணிந்துதான் செல்வார்!
* உணவு வகைகளில் ரொம்பக் கண்டிப்பு. ‘பசி எப்போதும் அடங்காத மாதிரியே சாப்பிடுங்கப்பா’ என நண்பர்களுக்கு அறிவுறுத்துவார். பக்கா சைவம்!
* திருப்பதி ஏழுமலையான்தான் கவுண்டமணி விரும்பி வணங்கும் தெய்வம். நினைத்தால் காரில் ஏறி சாமி தரிசனம் செய்து திரும்புவார். வாராவாரம் நடந்த தரிசனத்தை இப்போதுதான் குறைத்திருக்கிறார் கவுண்டர்!
* சினிமா உலகில் அவருக்குப் பெரிய நட்பு வட்டம் கிடையாது. ஆனாலும் சத்யராஜ், அர்ஜுன், கார்த்திக் ஆகிய மூவரிடமும் நெருக்கமாகப் பழகுவார்!
* கவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன்தான். அவரின் நகைச்சுவைபற்றி அவ்வளவு பெருமிதமாகப் பேசுவதைக் கேட்டுக்கொண்டே வயிறு வலிக்கச் சிரித்து வரலாம்!
* புகைப் பழக்கம் அறவே கிடையாது. வெளியே விழாக்கள், பார்ட்டிகள், பிறந்த நாள் நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்துகொள்கிற வழக்கம் கிடையாது. தனிமை விரும்பி!
* ஓஷோவின் புத்தகங்களுக்கு ரசிகர். அதே மாதிரி ஹாலிவுட் படங்களைத் தவறாமல் பார்த்து, நல்ல படங்களை நண்பர்களுக்குச் சிபாரிசும் செய்வார்!


* கவுண்டரின் தி.நகர் ஆபீஸுக்குப் போனால் சின்ன வயதுக்காரராக இருந்தாலும் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் சொல்வார். நாம் அமர்ந்த பிறகுதான் அவர் உட்கார்ந்து பேச்சை ஆரம்பிப்பார்!
* கவுண்டருக்கு எந்தப் பட்டங்களும் போட்டுக்கொள்ளப் பிடிக்காது. ‘என்னடா, சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம். அவருக்கே பட்டம் கிடையாதுடா!’ என்பார்.
* ஒவ்வொரு சனிக்கிழமையும் நிச்சயம் பெருமாள் கோயில் தரிசனமும் விரதமும் உண்டு!
* ஷூட்டிங் இல்லை என்றால், எப்பவும் சாயங்காலம் உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலில் முன்பு கவுண்டரைப் பார்க்கலாம். இப்போது நண்பர்களைச் சந்திப்பது ஆபீஸ் மொட்டை மாடியில் மாலை நடைப் பயிற்சியின்போதுதான்!
* கார்களின் காதலன் கவுண்டர். 10 கார்களை வைத்திருக்கிறார். நெரிசல் நிரம்பிய இடங்களுக்கு சின்ன கார். அகல சாலைகள் உள்ள இடங்களுக்குப் பெரிய கார்களை எடுத்துச் செல்வார். ‘நம் சௌகர்யம் பார்த்தா பத்தாது… ஜனங்க நடமாட சௌகர்யம் கொடுக்கணும்’ என்பார்!
* எண்ணிக்கையில் அடங்காத வாட்ச், கூலிங்கிளாஸ் கலெக்ஷன் வைத்திருக்கிறார். நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே வந்த பழக்கம் இது!
* டுபாக்கூர் சாமியார்களைப் பயங்கரமாகக் கிண்டல் செய்வார். ‘மனிதனாகப் பிறந்தவர்களைத் தெய்வமாகச் சித்திரிப்பது ஏமாற்றுவேலை’ என்பார். நமக்கும் கடவுளுக்கும் சாமியார்கள் மீடியேட்டரா எனச் சாட்டை வீசுவார். ஆனாலும், தீவிர கடவுள் நம்பிக்கை உடையவர்!
* கவுண்டருக்கு, அவர் நடித்ததில் பிடித்த படங்கள் ‘ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’ ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘நடிகன்’. ‘அட… என்னடா பெருசா நடிச்சுப்புட்டோம், மார்லன் பிராண்டோவா நானு’ என சுய எள்ளலும் செய்துகொள்வார்!
* ‘மறக்க வேண்டியது நன்றி மறந்தவர்களை, மறக்கக் கூடாதது உதவி செய்தவர்களை’ என அடிக்கடி குறிப்பிடுவார். ஒருவரை எதிரி என நினைத்துவிட்டால் அவர்களை அப்படியே புறக்கணித்துவிடுவார். ஆனால், நண்பர்கள் கோபித்தாலும், அவரே சமாதானத்துக்குப் போவார்!
* சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சைக்குப் பிறகு குணமானார் கவுண்டர். அப்போது மருத்துவமனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வந்த போன் கால்கள், இ-மெயில்கள் கணக்கில் அடங்காதவை. அதைப்பற்றிப் பேசினால் சிரிப்பு அரசனின் கண்களில் நீர் சுரக்கும்!
* ஒரே ஒரு தடவைதான் விகடனில் மிக நீண்ட பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். மற்றபடி பேட்டி, தொலைக்காட்சி நேர்காணல் என எதிலும் தலை காட்டியது இல்லை!
-நன்றி: விகடன் & என்வழி.காம்
Friday, March 4, 2011

ஹீரோயிசத்திற்கு வித்திட்ட எம்.ஜி.ஆர்தமிழில் சினிமா வெளிவரத்துவங்கிய காலத்தில் மக்களுக்கு அறிமுகமான புராண கதைகளே திரைப்படமாயின. புராணங்களில் வரும் கடவுளர்கள் நாயகர்களாகவும் அசுரர்கள் வில்லன்களாகவும் சித்தரிக்கப்பட்டனர். காலப் போக்கில் புராண கதைகளின் இடத்தை சமூகக்கதைகள் கைப்பற்றின. மக்களுக்கு நல்லது செய்யும் சமூககோபம் கொண்ட இளைஞன் கடவுளர்கள் வகித்த நாயகன் இடத்தை ஆக்ரமித்தான். மக்களை துன்புறுத்தும் ஜமீன்தார்களும், பண்ணையார்களும், தனிமனிதர்களும் அசுரர்களின் வில்லன் வேடத்தை தரித்துக் கொண்டனர்.

இவ்வாறு சினிமா என்ற கலை ஊடகத்தை நல்லவன்-கெட்டவன், நாயகன்-வில்லன் என்ற ஒற்றைத்தன்மையுடைய கவர்ச்சிப் பொருளாக குறுக்கியதில் எம்.ஜி.ஆருக்கு பெரும் பங்கு உண்டு. இவர் படங்களில் வரும் நாயகன்(எம்.ஜி.ஆர்.) சராசரி மக்கள் விரும்புகிற ஆனால் நடைமுறையில் ஒருபோதும் அவர்களால் சாத்தியப்படாத வீரதீர பராக்கிரம காரியங்களை செய்து மக்களை ரட்சிக்கும் வீரபுருஷனாக சித்தரிக்கப்பட்டார். இவர் எந்த கதாபாத்திரத்தை ஏற்றாலும், அது கலெக்டராக இருந்தாலும் சரி, கள்வனாக இருந்தாலும் சரி, மக்களை காத்துரட்சிக்கும் ஹீரோ பிம்பமே முன்னிறுத்தப்பட்டது. இவ்வாறு கதையை தாண்டி, கதாபாத்திரத்தை மீறி எம்.ஜி.ஆர். என்ற தனி நபரின் பிம்பம் ஒரு தேவதூதனின் பிரகாசத்துடன் ஜனங்களின் மனதில் ஆழப்பதிக்கப்பட்டது. ஏழைகளுக்கு உதவுதல், நலிந்தோருக்கு ஆறுதல் என்ற எம்.ஜி.ஆரின் சினிமாவுக்கு வெளியேயான நடவடிக்கைகள் ஹீரோயிசம் பிம்பத்தை மேலும் பிரமாண்டமாக கட்டியெழுப்ப உதவின. இதனால் எம்.ஜி.ஆர். பொதுவாழ்க்கையில் நுழைந்த போது பெருவாரியான ஜனங்களை எளிதாக தன்வசப்படுத்த அவரால் முடிந்தது.


இந்த இடத்தில் எம்.ஜி.ஆர். விசுவாசிகளுக்கு இயல்பான கேள்வி ஒன்று எழும். "குடிக்காதே, தர்மம் தலைகாக்கும், தாயை மதிக்க வேண்டும், உழைப்பே உயர்வு... என்பது போன்ற உயரிய கருத்துக்களை தனது படங்களின் வழியாகவும் பாடல்கள் மூலமாகவும் மக்களிடையே எம்.ஜி.ஆர் எடுத்துச் செல்லவில்லையா?" என்று, அவர்கள் கேட்கக்கூடும். ஆனால் இந்தக் கருத்துக்கள் ஒன்றும் எம்.ஜி.ஆர். கண்டுபிடித்தவை அல்ல. வள்ளுவரின் காலந்தொட்டு தமிழில் புழங்கி வருபவை. மேலும், எம்.ஜி.ஆர். படங்களில் பிரசாரம் செய்யப்பட்ட இக்கருத்துக்கள் அவரது ஹீரோயிசம் பிம்பத்தை வலுவூட்ட உதவினவே அன்றி மக்களின் அடிப்படைக் குணத்தில் சிறிய மாற்றத்தைக்கூட ஏற்படுத்தவில்லை. எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக வாக்களித்தவர்களின் எண்ணிக்கையுடன் குடிக்காதே, லஞ்சம் வாங்காதே என்பன போன்ற அவர் படங்களில் வலியுறுத்தப்பட்ட கருத்துக்களை நடைமுறை வாழ்வில் ஏற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் இந்த உண்மை புரியும். ஏறக்குறைய இக்கருத்துக்களை எம்.ஜி.ஆர் காரணமாக ஏற்றுக் கொண்டவர்கள் எவருமில்லை என்பதே உண்மை!

ஒருபுறம் இப்படி கதாநாயகன் பிம்பம் ஹீரோயிசம் லேபிளுடன் கட்டியெழுப்பப்பட்ட நேரம், இதற்கு நேர் எதிரான சினிமாவில் நடித்து ரசிகர்களை சம்பாதித்துக் கொண்டிருந்தார் சிவாஜிகணேசன். யதார்த்த வாழ்வில் எதிர்படும் சராசரி மனிதர்களின் வேடங்களே இவர் ஏற்றுக்கொண்டவை. கை இழந்தவனாக, கொலைகாரனாக, திருடனாக, அப்பராக, தியாகியாக இவர் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களும் கதாபாத்திரங்களின் குணங்களை அக்குணங்களுக்குரிய சோகம், பலவீனம், கோபம், பொறாமை,களிப்பு, வீரம் என சகல அழுக்குகளுடனும் அற்புதங்களுடனும் வெளிப்படுத்தியது. எம்.ஜி.ஆர். படங்களில் எம்.ஜி.ஆர். எனும் நடிகரைத் தாண்டி படங்களில் வெளிப்பட்ட அவரது ஹீரோயிசம் பிம்பம் எப்படி துதிக்கப்பட்டதோ அதற்கு நேர்மாறாக சிவாஜியின் படங்களில் சிவாஜி என்ற நடிகன் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களுக்காக மக்களால் மதிக்கப்பட்டார்

ஜனங்களை பொறுத்தவரை தங்கள் வாழ்வின் யதார்த்தத்தை வெளிப்படுத்திய நடிகனைவிட அந்த யதார்த்தத்தை மறக்கச் செய்யும் 'ஹீரோயிசம்' போதையை அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆரையே அதிகம் விரும்பினர். அதனால்தான் அவர் பொதுவாழ்வில் நுழைந்த போது அவருக்கு அமோக ஆதரவு அளித்தனர். இன்றும் எம்.ஜி.ஆர். பாணியை பின்பற்றும் ரஜினி, விஜய் போன்ற ஆக்ஷ்ன் ஹீரோக்களுக்கு அரசியலில் அதிக வாய்ப்பிருப்பதற்கும் சிவாஜியின் பாதையில் செல்லும் கமல் போன்றவர்களுக்கு ரசிகர்கள் அதிகமிருந்தும் அரசியலில் 'ஸ்கோப்' இல்லாமல் இருப்பதற்கும் இதுவே காரணம்.


எம்.ஜி.ஆர் தனது படங்களை அரசியல் நோக்கத்திற் காகவே பயன்படுத்தினார். அதில் தன்னை நல்லவராகவும் காட்டினர். அதே போல் நிஜவாழ்க்கையிலும் கடைப்பிடித்தார். மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இது அவரது ஹீரோயிசம் படங்கள்தான் முடிந்தது. ஆனால் இப்போதைய ரசிகர்கள் எதார்த்த சினிமாவை தான் விரும்புகிறார்கள். எம்.ஜி.ஆர்இன் பார்முலாவை பின்பற்றும் விஜய்க்கு இது கைகொடுக்குமா? என்பது சந்தேகமே!

எம்.ஜி.ஆர். வளர்த்து விட்ட ஹீரோயிசம் பிம்பத்தை ஜனங்கள் மெல்ல உதறத் தொடங்கியிரு க்கிறாக்கள். உதாரணமாக சமீபத்திய திரைப்படங்களை கூறலாம். மைனா, அங்காடித்தெரு போன்றவை வெற்றி பெற்றன. இதற்கு மாறாக 'ஹீரோயிசம்' லேபிளுடன் வந்த விஜய் படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை. ஆனால் காவலன் படத்தில் விஜய் தன்னை எதார்த்தமாக காட்டி அதில் வெற்றியும் பெற்றார். அழுக்கும் அற்புதங்களும் ஒருசேர கலந்த யதார்த்த நாயகனையே ஜனங்கள் இப்போது விரும்புகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. இப்படிப்பட்ட 'கதை'நாயகன்கள் அதிகரிக்கும் போது 'ரீல்'ஹீரோக்கள் அரசியலில் ரியல் ஹீரோக்களாக மாறும் அபத்தம் தமிழகத்தில் குறையும்!
Thursday, March 3, 2011

வெளிநாட்டு படங்களை உல்டா பண்ணும் கோலிவுட்!


சினிமா..சினிமா... வெளிநாட்டு படங்களின் கதைகளை காப்பி அடிக்கும் போக்கு தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது. ஹாலிவுட், கொரியா, ஜப்பான், ஈரான், ஆப்பிரிக்கா, பிரான்ஸ் நாட்டு படங்களின் கதையை திருடும் போக்கு இந்தி சினிமாவில்முதலில் ஆரம்பித்தது. வெளிநாட்டு படங்களைப் பார்த்து அதை நமது ரசிகர்களுக்கு ஏற்ப மாற்ற அமைப்பார்கள். அதே பாணியை தமிழ் சினிமா இயக்குனர்கள் பின்பற்றத் தொடங்கினார்கள்.

ஆரம்பத்தில் குறைவான படங்களிலேயே இதை காண முடிந்தது. நாயகன் படம் ஹாலிவுட¢டில் வெளியான காட்ஃபாதர் படத்தின் காப்பி. ஹெல்ட் ஹாஸ்பேஜ் என்ற ஹாலிவுட் படமே ரோஜா. அமேரோஸ் பெரோ என்ற பிரேசல் படம் ஆய்த எழுத்து, புதுப்பேட்டை - சிட்டி ஆஃப் காட், கஜினி - மெமன்டோ, அந்நியன் - செவன், பட்டியல் - பாங்காக் டேஞ்சரஸ், வேட்டையாடு விளையாடு - தி பான் கலெக்டர் ஆகிய படங்களை தழுவி எடுக்கப்பட்டவை.


புதுப்பேட்டை - சிட்டி ஆஃப் காட்
கஜினி - மெமன்டோ
அந்நியன் - செவன்
பட்டியல் - பாங்காக் டேஞ்சரஸ்
வேட்டையாடு விளையாடு - தி பான் கலெக்டர்
அஞ்சாதே - மிஸ்டிக் ரிவர்
தாம் தூம் - ரெட் கார்னர்
சரோஜா - ஜட்ஜ்மென்ட் நைட்

வெளிநாட்டு படங்களை காப்பி அடிக்கும் இந்த முறை அவ்வப்போதுதான் நடந்து வந்தது. ஆனால் கடந்த இரு ஆண்டு வெளியான பல படங்கள் இந்த காப்பி பாணியை பின்பற்றி வெளியாகியுள்ளன. அஞ்சாதே - மிஸ்டிக் ரிவர், தாம் தூம் - ரெட் கார்னர், சரோஜா - ஜட்ஜ்மென்ட் நைட், ‘வேகம்’, புது நாயகன் - செல்லுலார் ஆகிய படங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. ரவிக்குமாரின் ஜக்குபாய், வாசாபி என்ற பிரெஞ்சு படத்தையும் நந்தலாலா, கிக்கி ஜீரோ என்ற ஜப்பானிய படத்தையும் தழுவி எடுக்கப்பட்டது. யோகி ஆப்பரிக்க படத்தின் தழுவல் என்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் ஏராளாமான கதாசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனாலும¢ கதைக்கான புகழ் அனைத்தும் தங்களுக்கே கிடைக்க வேண்டும் என இயக்குனர்கள் விரும்புகிறார்கள். விரைவாக படத்தை முடிக்க வேண்டிய அவசரம் இருப்பதால் சிந்தனைக்கு வேலை தருவதை தவிர்த்து, வெளிநாட்டு படங்களை உல்டா செய்து விடுகின்றனர் என்கிறது கோடம்பாக்கம்.


ஒவ்வொரு முறை இந்த காப்பியடிக்கும் டிரெண்ட் குறித்து கேள்வி எழும்போதும் அந்த படத்தின் கதையை இன்ஸ்பிரேஷனாக மட்டுமே கொண்டு இயக்கியுள்ளேன்ர என இயக்குனர்கள் விளக்கம் தருகிறார்கள். சிலரோ, ‘இது மதுரை அருகே நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம்’ என்று சொல்வார்கள். ஆனால், இன்னொருவரின் உழைப்பை, மூளையை திருடுவதை விட நம்மிடம் உள்ள திறமையான கதாசிரியர்களை பயன்படுத்திக் கொள்வதே இந்திய/தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியம் தரும்’ என்கிறார்கள் சில சினிமா விமர்சகர்கள்.

தரவுகளுக்கு நன்றி: இணையம்